இலண்டன் பத்திரிகைகளுக்கு எதிரான வழக்கில் பரமேஸ்வரன் வெற்றி!
இலண்டனில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரத நாட்களில் பேர்கர் (Burger) சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
2009ஆம் ஆண்டு வன்னியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இனப்படுகொலைப் போரை நிறுத்தக் கோரி இலண்டனில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, பரமேஸ்வரன் சுப்ரமணியம் 23 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆட்சியிலிருந்த பிரித்தானிய அரசின் சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் அவர் தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பரமேஸ்வரன் சுப்ரமணியம் இரகசியமாக பேர்கரைச் சாப்பிட்டதாக ஆறு மாதங்களுக்குப் பின்னர் இலண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது சிறப்புக் கண்காணிப்புக் கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும், அவரது உண்ணாவிரதத்தினால் பொது மக்களின் பணத்தை பிரித்தானிய காவல்துறையினர் வீணடித்ததாகவும் இந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந் நிலையில், இப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ் வழக்கு விசாரணையின் போது இலண்டன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மெட்ரோபொலிட்ரன் காவல்துறையின் அத்தியட்சகர் சாட்சியமளிக்கையில், உண்ணாவிரதத்தின் போது காவல்துறையினர் எந்த சிறப்பு கண்காணிப்பு கருவிகளையும் பொருத்த இல்லை என்று தெரிவித்தார்.
இவ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு பத்திரிக்கைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என ஒப்புக் கொண்டார்கள்.
இந்த வழக்கின் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்ட போது இரு பத்திரிக்கை நிறுவனங்களின் சார்பிலும் வாதாடிய சட்ட நிபுணர் விக்ரோரியா ஜொலிபீ, அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பத்திரிக்கைகள் விலக்கிக் கொள்வதாகவும், ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதற்காக ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும், அதற்காக மன்னிப்பும் கோருவதுடன் நஷ்டயீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இச் செய்தி பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரனுக்கு சன் பத்திரிகை 30,000 பவுண்ட்ஸ்களையும் 'டெய்லி மெயில்' 47,500 பவுண்ட்ஸ்களையும் நஷ்டயீடாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது சட்டத்தரணி மேக்னஸ் பாயிட் தெரிவித்துள்ளார்.
இப் பத்திரிக்கைகளின் செய்தி காரணமாக கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும், இந் நிலையில் இன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.
தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் தனக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவை தனக்கு உதவ முன்வரவில்லை என்றும், இவ் வழக்கில் வெற்றி பெற்றால் வழக்கறிஞருக்குரிய சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இவ் வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.